Monday 28 September 2015

யோசிங்க மக்களே !!

எத்தன வர்ஷம் ஆனாலும் திருந்தவே மாட்டோம் !!

நேத்துல இருந்து எல்லாரும் profile picture மாத்திட்டு இருகாங்க. சரி அவிங்க தான் அப்படி பண்றாங்கனா, இன்னைக்கு ஒரு பக்கி கேக்குது,"ஏன் அக்கா நீங்க இன்னும் மாத்தாம இருக்கிங்கனு". நீ ஏன் தம்பி மாத்துனனு கேட்டா, எல்லாரும் மாத்துனாங்க நானும் மாத்திட்டேன் நு சொல்லுது  பயபுள்ள !! அவன பொருத்தவரைக்கும் digitalindia நு ஒரு வார்த்தைய தெரிஞ்சுவெச்சுகிட்டு ஒலட்டுது பக்கி !! ஒரு விஷயத்த முழுசா தெரிஞ்சுக்காம புரிஞ்சுக்காம ஆராஞ்சு பாக்கம இப்டி தான் இருக்கும்னு நாமலே முடிவு பண்ணிக்கறோம். அந்த விஷயத்தோட சாதகங்கள் பாதகங்கள் ல யோசிக்க கூட நாம நேரம் ஒதுகறது இல்ல !

ஏன்,எதுக்கு னு யோசிக்காம எல்லாரும் பண்றாங்க நானும் பண்றேன்னு பல  காரியங்கள பண்ணி தான் இப்டி உருபடாம இருக்கோம். ஏன் பொறியியல் துறை தேர்ந்தெடுத்தோம்னு  நம்ம கிட்ட யாராது கேட்டா,சொல்றதுக்கு பதில் இல்ல. எல்லாரும் எடுத்தாங்க நானும் எடுத்தேன்னு  தான் சொல்லுவோம். சரி சேந்தது தான் சேந்தோம், ஒழுங்கா படிச்சோமா? அதும் இல்ல !! assignment-ல இருந்து ப்ராஜெக்ட் வரைக்கும் எல்லாமே ஈயடிச்சான் காப்பி தான் !! படிச்சு முடிச்சு வெளில வந்து என்ன படிச்சோம் நு யோசிச்சா பெருசா ஒன்னும் இல்லைனு தான் தோணுது.

நம்மல பெத்தவங்க காச கொட்டி நமக்கு அறிவும்,அனுபவமும் கெடைக்கணும் நு படிக்க வெக்கறாங்க ! ஆனா என்னத்த படிச்சாலும் அரவேக்கடவே தான் இருப்போம்னா என்ன பண்றது !!

போன தலைமுறை ல தான் தவற விட்டுடோம் இந்த தலைமுறையாது நல்லார்க்கனும் னு படிக்க வெக்கறாங்க, ஆனா நாம ஆட்டு மந்தைங்கலாவே தான் இருக்கோம் !! அறிவு வளந்துச்சான்னு பாத்தா அதையும் காணோம், நாம பண்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏன் எதுக்கு யோசிச்சு பண்ற அளவுக்கு பக்குவம் வந்துச்சான்னு பாத்தா அந்த கருமத்தையும் காணோம். கடைசி வரைக்கும் இப்புடியே தான் இருப்போம் போல படிச்ச முட்டாளுங்களா !!  

போங்கடா நீங்களும் உங்க பட்டமும் !!

Wednesday 10 June 2015

காக்கைமை மரணம் !!

புங்கை மரத்தடியில் ஒரு காக்கைக் குஞ்சு
எறும்பு அரித்துக் கிடந்தது பாவமாய்
காது மூக்கு தொண்டை மருத்துவர்
கட்டுகிற வீட்டுச் செங்கல் பக்கம்
இரட்டைச் சிசுக்களின் மரணம் போல
இறந்து இடந்தன மேலும் இரண்டு
அன்றைக்கும் இன்றைக்கும் மருந்துக்குக் கூட
எந்தக் காக்கையும் கத்தவே இல்லை
அணிலை விரட்டிச் சோறு கொத்தின
தேங்காய்ச் சிரட்டையைத் தூக்கிப் போயின
எந்தக் கவலையும் இல்லாதது போல்
இறகை எக்கி எச்சம் இட்டன
காக்கைக் குஞ்சுகள் இறந்ததை விடவும்
காக்கைமை இறந்தது எத்தனை துயரம்.....!!


மணல் உள்ள ஆறு
- கல்யாண்ஜியின்  கவிதை தொகுப்பு


இந்த கவிதைய ஒரு வலைபதிவு படிச்சேன். இந்த நவீன உலகத்துல ஆறு அறிவு இருக்கற மனுசங்க தான்  அன்பு பாசம் நெகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி எல்லாம் மறந்து இயந்திரம் மாதிரி இருக்காங்கன, ஒற்றுமைக்கு பெயர்போன காக்கைகள் கூட மாறிடுச்சு :( விஞ்ஞானம் என்ன தான் வேலைகள குறைத்தாலும், நாம எவ்வளவு இழந்திருக்கிறோம்னு இந்த கவிதை அழகா சொல்லிருச்சு !! 

Tuesday 26 May 2015

நிறைவு -காலாவதியான சொல் !!

     போன வாரம் என் தோழியின் திருமணதிற்காக நானும் தந்தையும் காரில்  சென்று கொண்டிருந்தோம். திருமணம் நடக்கவிருந்த மண்டபம் சற்று தொலைவில் இருந்தமையால் NH சாலையில் செல்ல வேண்டி இருந்தது. இது மாதிரியான பயண தருணங்களில், காரில்  பாடல்களை ஒலிக்க விடாமல்,  அந்த சேவையை நானே செய்துகொண்டிருப்பேன் ;)  அதாவது, வாய் ஓயாமல் பேசிச்செல்வது  !! அப்படி பேசிக்கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஒரு கார்  வேகமாக  சென்றது. நான் தந்தையிடம் "cha, என்ன ஸ்பீட்" என்று கூறினேன். அதற்கு என் தந்தை கூறிய பதிலை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் அதையும் தாண்டி சற்று சிந்திக்கவும் வைத்தது.

      நவீன உலக இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களின்(திறமையின்) மதிப்பை உணராது அடுத்தவர் வைத்திருப்பதிலேயே கண்ணாக இருக்கின்றனர். "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து", இந்த பழமொழி இப்பொழுது காலாவதி ஆகிவிட்டது. வாழ்க்கையில் ஒரு இலக்கை அடையும் போது அடுத்தது என்ற கேள்வி பூதாகரமாக தோன்றுகிறது. நிறைவு என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக போய்விட்டது. எது உண்மையான மகிழ்ச்சி என்ற கேள்வி பதிலற்றதாகி விட்டது. சிறிய பொருட்களில் தொடங்கி வாழும் வாழ்க்கை வரை அனைத்திற்கும் அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்க்கின்றோம். பெரிய பொருட்களில் ஆசை வைத்து, சின்ன சின்ன சந்தோசங்களை இழந்துவிடுகின்றோம் !!

      இதனால் நான் கூறவருவது என்னவென்றால், இல்லாததை எண்ணி அதை நோக்கி ஓடுவதை விட, இருப்பதை வெய்த்து மனதிருப்தி அடையுங்கள். இருப்பதை பெருக்க நினைப்பவர்கள், வாழ்க்கையில் எதாவது ஒரு இடத்தில் மனதிருப்தி அடையுங்கள். கடைசிவரை ஓடிக்கொண்டே இருந்தால் வாழ்கையை வாழ முடியாது :(.


      என் தந்தை கூறிய பதில்,"நம்ம காரும் அவ்ளோ ஸ்பீட் போகும் சாமி. நான் தான் எதுக்கு அவ்ளோ ஸ்பீட் னு மெதுவா போயிட்டு இருக்கேன். நமக்கு இது தான் கரெக்ட்".

நாங்கள் பயணித்த கார்: மாருதி 800 !
எங்களை கடந்து சென்ற கார்: டொயோட்டா fortuner !

Thursday 26 February 2015

தோல்வியின் சுவை !!

வாழ்கை என்பது வெற்றி தோல்வி, இன்பம் துன்பம் கலந்த கலவை என்ற உண்மை ஏனோ நமக்கு பல சமயம் மறந்துவிடுகிறது. தோல்வியை/துன்பத்தை கண்டு எதிர்த்து நிற்போரை விட துவண்டுவிடுவோரே அதிகமுண்டு இவ்வுலகில் !! எனக்கு மட்டும்  வாழ்க்கை ஏன்  இவ்வளவு துன்பத்தை கொடுக்கிறது என்று எண்ணுவோருக்காக இந்த பதிவு !!

சில  நாட்களுக்கு முன்பு வலைதளத்தில் ஒரு பதிவை படித்தேன். அதில் ஒரு பெண் தான் நோய்வாய் பட்டபொழுது சந்தித்த இன்னைகளை சுற்றத்தார் பார்வைகளை வலிகளை அதை அவர் கடந்து வந்த பாதைகளை பற்றி எழுதியிருந்தார். அதை படித்த பின்பு தான் வாழ்கையில் துன்பத்தின்/தோல்வியின் முக்கியத்துவம் புரிந்தது.  நாம் வெற்றி அடையும்போது நம்மை சுற்றி 1000 பேர் இருக்கலாம் ஆனால் துவண்டு விழும்போது தான் அவர்களின் உண்மையான முகம் தெரியும். துன்பம்/தோல்வி இரண்டுமே ஒருவகையில் அளவுகோள். நம் மன உறுதியையும்,  நம் சுற்றத்தாரின் எண்ணங்களையும் துல்லியமாக கணித்துவிடும். ஆக மொத்தம்,  வெற்றியோ தோல்வியோ இன்பமோ துன்பமோ அனைத்தும் நம் பார்வையில் நாம் எடுத்துகொள்ளும் விதத்தில் தான் உள்ளது. வெற்றியை நோக்கி பயணிப்பது சுவாரசியம் என்றால் தோல்வி அடைந்து வீழ்ந்து எழுவது அதைவிட சுவாரசியமானது !!

அந்த பெண்ணின் பதிவுக்கான லிங்க்:

http://vaidehivc.blogspot.in/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html

Thursday 27 November 2014

அப்பரைசல் ;)

                  எல்லா I.T அலுவலகங்களிலும் வருடத்தின் கடைசி மாதம், அந்த வருடம் முழுவதும் நாம் என்ன என்ன வேலைகள் செய்தோம் என்பதை ஒரு டாகுமென்ட்  ஆகா செய்து தர கூறுவார்கள் ! அப்பப்பாஆ ஆ ஆ ஆ  !! அதை செய்து முடிப்பதற்குள்  கண் விழிகள் பிதிங்கிவிடும் :(  நாம் செய்த வேலையை நாமே ஆகா ஓஹோ என புகழ்ந்து தள்ள வேண்டும் . எளிதாக கூறினால், ஜோதிகா போல 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 500 நடிக்க வேண்டும்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த வருடத்தின் முதல் மாதமே, நான் இந்த வருடம் இன்ன இன்ன செய்ய போகிறேன் என்று நாம் பதிவு செய்திருப்போம். அதை பதிவு செய்யறதுக்கு கடைசி தேதி வேறு கொடுத்திருப்பரகள். அப்பயும் முடிக்காமல் அதுக்கும் எக்ஸ்ட்ரா டைம் கேட்டு தான் முடிப்போம், இது ஒரு தனி கதை. நமக்கு தான் சொன்ன வார்த்தைய கடைபிடிக்கற பழக்கமே இல்லையே ;) புது வருடம் பிறக்கும் பொது எடுக்கும் உறுதியை அடுத்த நாளே மறந்து போகும் ஆளுங்க நாம. இதில் அலுவகத்தில் கொடுக்கின்ற வாக்கையா காப்பதபோகிறோம் ?. நம்ம கிட்டயேவா :P

இப்படி வருடத்தின் முதல் மாதம் நமக்கு நாமலே வைத்த சூனியம், சரியாக அந்த வருடத்தின் கடைசி மாதம் வேலை செய்யும். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, நமக்கு பிடிக்கும் விஷயம் நம் மேல் அதிகாரிக்கு பிடிக்காது. அவருக்கு பிடிக்கறது நமக்கு சுத்தமாக பிடிக்காது :D அதனால் வேலை செய்யும்பொழுது அப்போ அப்போ சில பல முறைப்புகளை பரிசாக வாங்க வேண்டி வரும். இதுக்கெல்லாம் அஞ்சற ஆசாமிகளா நாம்!!

வீட்டில் நாம் படிக்கும்போது ஒருவரும் பார்க்க மாட்டார்கள் சரியாக நாம் தூங்கும்பொழுதோ அல்லது தொலைக்காட்சி பார்க்கும்பொழுதோ நம் பெற்றோற்கள் நம்மை கண்டு நன்றாக வசை பாடுவார்கள். அதே போல் தான் இங்கும், நாம் வேலை செய்யும் பொழுது கண்டுகொள்ளாதது போல் இருப்பவர்கள் நாம் வெட்டியாக இருக்கும்பொழுது குறை கூறுவார்கள். அதே போல் சரியாக மாலை 6 மணிக்கு கிளம்பினால் அது கொலை குற்றத்திற்கு சமானம் :(


இப்படி சில பல இடிகளை வாங்கி, இவற்றை எல்லாம் கடந்து நாம் செய்து முடிக்கும் வேலை ஏனோ  வேலையாகவே அவர்களுக்கு தெரிவதில்லை. சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை, நமக்கு தெரிந்து நாம் செய்த வேலைகள் (5 பைசா வேலை முதல் நாம் செய்த அதிப்படியான வேலை வரை) எல்லாவற்றையும்  டாகுமெண்டில் போட்டு சப்மிட் செய்யும்பொழுது பாதி உயிர் போய்விடும்.


மீதம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிரும், நாம் சப்மிட் செய்த டாகுமெண்டை படித்து மேல் அதிகாரி மீட்டிங் அறைக்கு அழைக்கும் பொழுது பறந்துவிடும். நாம் குறிப்பிட்டுள்ள நல்ல வேலைகளை எல்லாம் விடுத்து, இருப்பதில் மிக மொக்கையான வேலை ஒன்றை சுட்டி காட்டி, "இதெல்லாம் ஒரு வேலையா?" என்பார்.நாம் செய்த வேலை வெட்டி வேலை, 5 பைசா வேலை என்று நமக்கே தெரியும். இருந்தாலும் அதை நாம் ஒத்துக்கொள்ள கூடாது. "நீ கழுடுன  ஆணி எல்லாமே தேவை இல்லாதது தான்" என்று கூறினாலும், அப்படி இல்லை நான் கலுடுனது எல்லாமே தேவையான ஆணி தான் என்று நாம் அழுத்தி கூற வேண்டும்.

இவ்வளவு கொடுமைகளையும் திடமான மனதோடு சமாளித்தால் மட்டுமே நமக்கு தாரளமாக கடைசி பக்கெட்  தருவார்கள் ;)(பக்கெட் என்பது ஊதிய உயர்விர்க்கான ரேடிங், இருக்கறதே 3).

இனி மேல் யாராவது I.T துறையில்  வேலை பாக்கறது ஜாலி நு சொல்லுவிங்க ?

Monday 30 June 2014

என் சகோ !!


நேற்று தான் என் பெற்றோர்கள் ஒரு சின்ன சிசுவை கையில் கொடுத்து இது உன் தம்பி என்று சொன்னது போல்  உள்ளது. நாட்கள் வாரங்களாகி  வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி 18 வருடங்கள் முடிந்துவிட்டது. நாட்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடிகொண்டிருகிறது. நான் என் தம்பிக்கு அறிவுரை சொன்ன காலம் போய் அவன் எனக்கு அறிவுரை சொல்லும் காலம் வந்துவிட்டது !!

சென்ற வாரம் என் வீட்டில் நடந்தது:

என் தந்தை என்னை மேல் படிப்பு படிக்கும் படி கூரிகொண்டிருந்தார். எனக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு இல்லை ஆர்வமும் இல்லை. நமக்கு தான் படிப்பு என்றாலே வேப்பங்காய் ஆச்சே !! நானும் என்னால் முடிந்த அளவு காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தேன். சரி எப்படியும் தந்தையை சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன்  ஏனென்றால் இது  எப்பொழுதும் வீட்டில் நடக்கும் விஷயம். ஆனால் ஏனோ இம்முறை என் தந்தை உறுதியாக இருந்தார்.

நமக்கு பிடிக்காத விஷயம் நம்மேல் திணிக்கப்படும்போது ஒன்று நமக்கு கோபம் வரும் அல்லது அழுகை வரும். எனக்கு ஏனோ அழுகை தான் வந்தது. கண்களில் கண்ணீர் நீர்வீழ்ச்சியை போல் கொட்டியது. நானும் என் தந்தையும் பேசிக் கொண்டிருந்ததை என் தம்பி கவனித்துக் கொண்டிருந்தான். என் அழுகை ஆரம்பம் ஆனதும் கூடவே அவன் கோபமும் ஆரம்பமானது. அதுவரை தந்தையின் அருகில் அமர்ந்து இருந்தவன் என் அழுகையை கண்டதும் எழுந்து வந்து என் கண்ணீரை துடைத்தான். சரி தம்பி நமக்காக தந்தையிடம் பேசபோகிறான் என்று நான் நினைத்தேன். அனால் நடந்ததென்னமோ வேறு :(

சில நொடிகள் என்னை பார்த்தவன், இரயில் பயணங்களில் எதிர்பாரா சமயத்தில் எதிரே வரும் இரயில் போன்று என்னை திட்ட ஆரம்பித்தவன் திட்டினான் திட்டினான் திட்டிக்கொண்டே இருந்தான். இவனுக்கு தந்தையே மேல் என்று நான் என்னும் அளவிற்கு அவனிடம் வாங்கிக்கட்டி கொண்டேன். இப்போ எதுக்கு என்ன திட்டற என்று நான்கேட்டதுக்கு அவன் கூறியவை," உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா? அப்பா சொன்னதுல  உனக்கு இஷ்டமில்லனா, இது எனக்கு வேணாம்பானு சொல்லு. அப்பா கேக்கலைனா அவர convince பண்ண முயற்சி பண்ணு, அப்பவும் முடியலைனா உனக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணு, நீ எடுத்த முடிவுல உறுதியா இரு. அதவிட்டுட்டு இப்டி லூசு மாதிரி ஏன் அழுகுர? நீ அழுகுர நால இப்போ ஒன்னும் மாற போறதில்ல. ஒரு ப்ரோப்லம் வந்தா அத எப்டி சமாளிக்கறதுனு யோசி. சும்மா லப்போ லப்போனு அழுகாத. மூஞ்சிய பாரு."

அவன் திட்டிய பிறகு நான் கோவமாக இருப்பது போல் எழுந்து வெளியே சென்று அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து வந்தவன்,"அக்கா நீ அழுகறத பாத்ததும் நான் ஏதோ கோவத்துல திட்டிட்டேன் கோச்சுக்காத கா. நீ அழுதா நல்லாவே இல்ல. சரி வா நாம வெளில போய்டு வரலாம்." என்று கூறி அழைத்துச் சென்றான்.

அவன் பேசும் பொழுது நான் மனதில் நினைத்தவை, "நாம பாத்து வளந்த பையனா இவன் ? ஒண்ணாது படிக்கும் போது பக்கத்துல இருக்க பையன் அடிச்சுட்டான் அவன என்னனு வந்து கேளு அக்கானு அழுதுட்டு வந்து நின்ன பையன் எங்க, அழுகாத அக்கானு சொல்ற பையன் எங்க !! எவ்ளோ மாற்றம் !! எவ்ளோ வளந்துட்டான் !!"


ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் தம்பிடா ;)


Tuesday 24 June 2014

எங்கே செல்லும் இந்த பாதை !!

என்னுடைய முதல் பதிவு!!

புத்தகம் - சிலருக்குப் பிடிக்காத, பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பலரில் நானும் ஒருவள். என் புத்தக ஆர்வத்தைக் கண்ட எனது நண்டபர்கள், "ஏன் உன் எண்ண்ங்களை எழுத்தாக்கக் கூடாது??" என்றனர். அப்போது எழுதும் எண்ணம் வரவில்லை. தற்போது சமீபகாலமாக நான் கேள்விப்பட்ட, படித்த சில செய்திகள் என்னை எழுத தூண்டியது.

"காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" என்று பாடியவர்கள் நாம்.

ஆனால் நம் நாட்டில் தான்  சிகப்பழகு கிரீம்கள் அமோக விற்பனை ஆகின்றன. கடந்த 2008-ல் மட்டும் 397 மில்லியன் டாலர்களாக இருந்த சிகப்பழகு க்ரீம்களின் இந்திய சந்தை வியாபாரத்தின் மதிப்பு தற்போது 650 மில்லியன் டாலர்களைத் தாண்டி விட்டது. ஸ்கின் மாய்ச்சரைஸர் உள்ளிட்ட இதர க்ரீம்கள் மட்டும் கடந்த இரண்டே வருடங்களில் 84 சதவிகிதக் கூடுதல் விற்பனையாம்.

என்ன தான் 1947லேயே வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேரினாலும் வெள்ளை நிறத்தின்மேல் இருக்கும் மோகத்தை துரத்த முடியவில்லை. சிவப்பாக இருப்பவர்கள் தான் அழகானவர்கள் என்றால், நம் அம்மா அழகாக இல்லையா ??? இல்லை நம் அப்பா தான் அழகா இல்லையா ???. சிவப்பு என்பது வெறும் ஒரு நிறமே தவிர அதை வைத்து ஒரு மனிதனை இடைபோடக் கூடாது.

என்னுடன் பணிபுரியும் சிலருக்கு வாழ்க்கைத் துணை தேடுகிறார்கள் . இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆண் பெண் இருபாலருமே, தங்களது வாழ்க்கை துணைக்கு நல்ல குணமுடையவர்களைத் தேடுவதில்லை. வெள்ளைத் தோலுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். வேடிக்கை மாந்தர்கள் !!

என் தலைமுறையினர், 18 அல்லது 20 வயதிற்குப் பிறகுதான் அவர்கள் அழகையும், நிறத்தையும் பராமரிக்க கிரீம்களை வாங்கினர். ஆனால்தற்போது 4-5 வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட கண்ட க்ரீம்களை வாங்கி பூசிக்கொள்கிரார்கள். உலகில் தீர்க்க முடியாத 1000 பிரச்சனைகள் உள்ளது. நம் எதிர் கால தலைமுறையினருக்கு அந்த பிரச்சனைளை எதிர்நோக்க கற்றுக்கொடுக்காமல் நாம் ஒரு தவரான உதாரணமாக இருந்துவிடக் கூடாது

நம்மிடம் எது இல்லை என்றாலும் தன்னம்பிக்கை ஒன்று போதும், சாதிப்பதற்க்கு. நம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை நிறத்தில் வளர்க்காமல் மனத்தில் வளர்த்தால் போதும்

உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. சிந்தித்து பாருங்கள். இன்னும் நாம் கடக்க வேண்டிய பாதை வெகு தூரம் உள்ளது!!!